தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் ரெயில் சேவை தொடக்கம்


தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பின் ரெயில் சேவை தொடக்கம்
x

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு முத்துநகர் ரெயில் புறப்பட்டது.

தூத்துக்குடி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

மழை நின்றும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். தொடர் மழையால் தூத்துக்குடியில் பஸ் மற்றும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ரெயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

அதன்படி, தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு முத்துநகர் ரெயில் புறப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், ரெயிலில் பயணிகள் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் ரெயில் வழித்தடத்தில் தண்டவாளங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், இன்னும் ஒரு வாரத்தில் திருச்செந்தூரில் ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story