சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:45 PM GMT)

நீலகிரியில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

மாண்டஸ் புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, குன்னூரில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால் படகு இல்ல சாலை ரெயில்வே பாலம், பஸ் நிலையம் பகுதியில் வெள்ளம் தேங்கி நின்றது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை புதுக்காடு பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்அறிந்ததும் அங்கு சென்று குன்னூர் தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல் நேற்று ஊட்டி பிரிக்ஸ் பள்ளி சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மேலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 89 சதவீதம் இருந்தது. மழையுடன், கடும் பனிமூட்டமும் இருந்ததால் கடுங்குளிர் நிலவியது. இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் மெதுவாக இயக்கப்பட்டன. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. இருப்பினும், சிலர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஊட்டி படகு இல்லத்தில் சவாரி செய்தனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஊட்டியில் 67 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வீடு இடிந்தது

இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குன்னூர்-மேட்டுப்பாளையத்தில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வந்தன. பனிமூட்டத்தால் மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் தாமதமாக குன்னூருக்கு வந்தன. கோத்தகிரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் கோடநாடு இருமநாடு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 50) என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.


Next Story