வாலிபரை வெட்டிக் கொல்ல முயற்சி
மணல்மேடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது.இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது.இது தொடர்பாக 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் ஜின்னாத்தெரு லியாக்கத் அலி மகன் தவ்பீக் (வயது30). இவர் மீது மணல்மேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் ஆத்தூரில் உள்ள கணேசன் மகன் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் ஒரு சில தினங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 28-ந் தேதி நள்ளிரவு பள்ளிவாசல் தெருவில் உள்ள முகம்மது ஹன்னான் என்பவரது வீட்டில் தவ்பீக் தூங்கிக்கொண்டிருந்தார்.
2 பேர் கைது
அப்போது ஆத்தூர் நடுத்தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (35), வெள்ளாளத் தெருவை சேர்ந்த ஹலில் (44) மற்றும் ஆத்தூர் மேல அக்ரஹாரம் கணேசன் மகன் அய்யப்பன் ஆகியோர் ஒன்று சேர்ந்து தவ்பீக்கை தாக்கியும் அரிவாளால் வெட்டி விட்டும் தப்பியோடியதாக கூறப்படுகிறது. உயிருக்குப் போராடிய தவ்பீக்கை உடனடியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தவ்பீக் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன், ஹலில் மற்றும் அய்யப்பன் ஆகியோர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் மற்றும் ஹலிலை கைது செய்தனர். மேலும் அய்யப்பனை வலைவீசி தேடிவருகின்றனர்.