உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தசாமியாரின் உருவப்படத்துக்கு தீ வைத்து நாகையில், தி.மு.க.வினர் போராட்டம்


உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்தசாமியாரின் உருவப்படத்துக்கு தீ வைத்து நாகையில், தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2023 7:30 PM GMT (Updated: 5 Sep 2023 7:30 PM GMT)

சாமியாரின் உருவப்படத்துக்கு தீ வைத்து நாகையில், தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்

உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியாரின் உருவப்படத்துக்கு தீ வைத்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.10 கோடி பரிசு

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்தார்.

சாமியார் உருவப்படம் தீவைத்து எரிப்பு

இதனைத்தொடர்ந்து அயோத்தி சாமியாரை கண்டித்து நாகை அவுரி திடலில் நேற்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவின் உருவப்படத்தை தி.மு.க.வினர் துடைப்பத்தால் அடித்து தீ வைத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு நகரசபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லோகநாதன், நகர அவை தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நகர பொறுப்பாளர்கள் சிவா, திலகர் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக நாகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story