இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அடித்துக்கொலை; முதியவர் கைது


இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அடித்துக்கொலை; முதியவர் கைது
x

தீபாவளி கொண்டாடுவதற்காக திருச்சி வந்த இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

தீபாவளி கொண்டாடுவதற்காக திருச்சி வந்த இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்து நாட்டு குடியுரிமை

திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னதுரை (வயது 47). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்று அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் இவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று இருந்தார்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சின்னதுரை லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் நேற்று காலை ரெயில்வே குட்ஷெட் மேம்பாலம் அருகே ஒரு டாஸ்மாக் கடை அருகே இருந்த பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார்.

அடித்துக்கொலை

அப்போது அங்கு வந்த சிலருக்கும், சின்னதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுபாட்டிலால் சின்னதுரையின் தலையில் பலமாக தாக்கினர். இதில் அலறி துடித்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சின்னதுரையை திருச்சி முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன் (65) உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது.

இது தொடர்பாக சின்னதுரையின் மனைவி மதுமிதா அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் தர்மனை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சின்னதுரை அடுத்த மாதம் லண்டனுக்கு செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story