'சிட்டீஸ்' எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி


சிட்டீஸ் எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி
x

‘சிட்டீஸ்' எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை

'சிட்டீஸ்' எனும் சிறப்பு திட்டத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தி மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கவிழா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர், பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும், கிரிக்கெட் பயிற்சியளிக்கும் ஜெனரேசன் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் பிரீத்தி அஸ்வின், கால்பந்து பயிற்சியளிக்கும் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர்கள் பிரியா கோபாலன் மற்றும் சந்தியா ராஜன் ஆகியோரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், பிரெஞ்சு நாட்டின் துணைத் தூதர் லிசா டால்பட் பாரே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

துணை மேயர் மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'கிரிக்கெட் பயிற்சி ரூ.19 லட்சம் செலவிலும், கால்பந்து பயிற்சி ரூ.8 லட்சம் செலவிலும் மேற்கொள்ளப்படுகிறது. கிரிக்கெட் பயிற்சிக்கு சென்னை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தேர்வு செய்து மிகத் திறமையான 30 மாணவ, மாணவிகள் கொண்ட சென்னை பள்ளி கிரிக்கெட் அணி உருவாக்கப்படுகிறது. பயிற்சியில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு மட்டை, பந்துகள், காலணிகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

சென்னை பள்ளியில் படிக்கும் 60 மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை வழங்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story