வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 12:08 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 30.6.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது.

இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1,000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகை பெற முடியாது. தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றும் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story