ஒன்றியக்குழு கூட்டம்


ஒன்றியக்குழு கூட்டம்
x

தெள்ளாரில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியக்குழு கூட்டம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.குப்புசாமி, சு.வி.ஸ்ரீதரன், துணைத்தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்நமண்டியில் உள்ள குடிநீர் குளத்தை தூய்மைப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி பாண்டுரங்கன் கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் குடிநீர் குழாயில் குடிநீர் மிகவும் அசுத்தமாக வருவதாக ஒன்றியக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன் பேசுகையில், தெள்ளார் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 111 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 21 பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்களுடன் செயல்படுகிறது.

பெலகாம்பூண்டி பள்ளியில் 2 மாணவர்களும், கண்டையநல்லூர் பள்ளியில் 4 மாணவர்களும் மட்டுமே கல்வி பயில்கின்றனர். மேலும் 2 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், 5 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 6 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 4 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 2 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் இந்த பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.


Next Story