மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
சென்னை மயிலாப்பூர் காய்கறி சந்தையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கீரைக்கட்டு, கருணைக்கிழங்கு, சுண்டைக்காயை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றார்.
சென்னை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தாலும், அவரது சொந்த ஊர் திருச்சி அருகேயுள்ள முசிறி ஆகும். கல்லூரி வரை திருச்சியில்தான் படித்தார். தற்போது நிதி மந்திரியாக இருந்து இந்தியாவுக்கே அவர் பட்ஜெட் போட்டாலும், ஒரு குடும்பத்தலைவியாக வீட்டு வரவு-செலவுகளையும் கவனிக்கத் தவறுவது இல்லை.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இங்கு வந்த நிர்மலா சீதாராமன், மாலை நேரத்தில் காரில் மயிலாப்பூர் வழியாக மந்தைவெளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, மயிலாப்பூர் காய்கறி சந்தையில் விதவிதமான காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்ததும் காரை நிறுத்தக் கூறினார்.
காய்கறி வாங்கினார்
காரைவிட்டு இறங்கிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், சாதாரணமாக அந்தக் கடைக்கு சென்று அங்கிருந்த பெண்ணிடம் காய்கறி விலை நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். பின்னர், கூடையில் வைக்கப்பட்டிருந்த கருணைக்கிழங்கை தானே ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து, கடைக்கார பெண்ணிடம் எடை போடக் கூறினார்.
அந்த பெண், 'எவ்வளவு வேண்டும்?' என்று கேட்டதற்கு, '2 கிலோ வேண்டும்' என்று நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், பச்சை சுண்டைக்காயையும் தேர்ந்தெடுத்து வாங்கிய அவர், 'தண்டுக்கீரை இருக்கிறதா?' என கேட்டார். ஆனால் கடைக்கார பெண் 'இல்லை' என்று கூறியதுடன், மற்ற வகை கீரை இருப்பதாக கூறினார்.
குறைகளை கேட்டார்
அதைத் தொடர்ந்து, மணத்தக்காளி கீரை, முளைக்கீரையை நிர்மலா சீதாராமன் வாங்கினார். 'டெல்லியில் இதுபோல் கீரைக்கட்டுகள் பசுமையாக கிடைப்பதில்லை' என்று வியாபாரிடம் தெரிவித்த அவர், அங்கு காய்கறி விற்றுக்கொண்டிருந்த மற்ற பெண்களிடமும் மனம்விட்டு பேசினார்.
அப்போது, வியாபாரத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?, சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?, தேவைப்படும் உதவிகள் என்ன? என்று நிர்மலா சீதாராமன் சகஜமாக கேட்டார். பெண் வியாபாரிகளும் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை தயங்காமல் எடுத்துக்கூறினார்கள்.
'யதார்த்தமா இருக்கீங்க...'
அதன்பிறகு, வாங்கிய காய்கறிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். அப்போது அங்கு காய்கறி வாங்க வந்தவர்களில் சிலர், 'நீங்க ரொம்ப யதார்த்தமா இருக்கீங்க. பார்த்து பேசியதில் சந்தோஷம்' என்று கூறினர். அவரும் புன்னகைத்தபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.