'இந்தியாவின் கண்டுபிடிப்புகளுக்கு உலகளவில் சந்தை' மத்திய மந்திரி பேச்சு


இந்தியாவின் கண்டுபிடிப்புகளுக்கு உலகளவில் சந்தை மத்திய மந்திரி பேச்சு
x

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், இந்தியாவின் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்துக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது என்று கூறினார்.

சென்னை,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை நேற்று பார்வையிட்டார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய பியூஷ் கோயல் பேசியதாவது:-

உலகமே எதிர்பார்க்கக்கூடிய பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதிலும் அதிகமான இளைஞர்களை கொண்ட நாடாகவும் உள்ளது. இந்திய இளைஞர்களிடையே அதிக திறன்கள் உள்ளன. அதை உலகம் எதிர்பார்க்கிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு, நம்முடைய திறமை, புதிய கண்டுபிடிப்புகள் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம் வெளிப்பட்டன. திறமை, தரம், திறன் கொண்ட, தோற்கடிக்க முடியாத முழுமையான கலவையை உலகத்துக்கே வழங்கும் நாடாக இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது.

திறமைக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்குமான பசியோடு இந்த உலகம் காத்திருக்கிறது. அதை இன்றைய இளையதலைமுறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது தினசரி பிரச்சினைகளுக்கான எளிய தீர்வை கொண்டுவர அறிவியலுடன் சேர்ந்த மாணவர்களின் கலை வடிவமும் பெரிதும் உதவுகிறது. தைரியமான பார்வை, மாபெரும் லட்சியம் ஆகிய இரண்டையும் இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும்.

உலகளவில் மிகப்பெரிய சந்தை

வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை அடைய அனைவரும் கூட்டாக பயணிக்க வேண்டும். நம் இளைஞர்கள், மாணவர்களின் ஒவ்வொரு பங்களிப்புக்கும் இந்தியா நன்றியுடன் இருக்கும். இந்தியாவின் வளர்ந்துவரும் மக்கள்தொகை, உங்களை பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் வளப்படுத்தும். உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு நல்ல விலை கிடைப்பதையும் உறுதி செய்யும். இந்தியாவின் பலம், வளம் என்பது அதன் மக்கள்தொகைதான்.

உலகமே இன்று இந்தியர்களை நாடி வருகிறது. உலகில் இந்தியா ஒளிரவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. உலகம் முழுவதும் டி.வி., செல்போன்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கான மிகப்பெரிய சந்தையை இந்தியா வழங்குகிறது. நிலையான, ஆற்றல்மிக்க உற்பத்தி திறன் வாயிலாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும், ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் உலகளவில் மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. நிலையான, புதிய தொழில்நுட்ப பொருட்களை அடக்கவிலையில் தயாரிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட மேற்கத்திய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

சகித்துக்கொள்ள மாட்டோம்

ஊழலுக்கு எதிரான அரசாகத்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஊழல், லஞ்சத்தை எந்த இடத்திலேயும் சகித்துக்கொள்ள மாட்டோம். மாணவ-மாணவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையை ஆன்லைன் மூலம் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதை எங்களிடம் சொல்லுங்கள். சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story