ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்- தொல்.திருமாவளவன் பேட்டி
ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரெயில்வே துறை மந்திரி பதவி விலக வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரெயில்வே துறை மந்திரி பதவி விலக வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
பேட்டி
சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம், உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவாக இருக்கிறது. கவாச் என்கிற பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப கருவியை போதுமான அளவு, முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்வதை விடஅரசு துறைகளை எல்லாம் தனியார் மயமாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது அவர்களின் செயல் திட்டத்தில் ஒன்றாக உள்ளது. அதனால்தான் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. ரெயில்வே துறையில் தேவையான பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை நியமனம் செய்திருந்தால் இப்படி ஒரு கோர விபத்து நடந்திருக்காமல் தடுத்திருக்க முடியும் என்ற கருத்துகள் எழுகின்றன.
ரெயில்வே மந்திரி
இந்த தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் மத்திய ரெயில்வே துறை மந்திரியாவது பதவி விலக வேண்டும். ரெயில்வே துறை மந்திரி பொறுப்பில் இருந்தால், இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறியும் விசாரணையை முழுமையாக நடத்த முடியாது.
இந்த கோர விபத்து நடந்தவுடன் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டது பாராட்டுதலுக்குரியது. அந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு 2 அமைச்சர்களை ஒடிசாவிற்கு அனுப்பியதோடு, அதிகாரிகள் குழுவையும் அனுப்பி, ஒடிசா மாநில அரசோடு இணைந்து மீட்பு பணியில் ஈடுபடும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்.
ஆர்ப்பாட்டம்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, ஆணவக் கொலை நடப்பதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு சம்பட்டி அடியை கொடுத்து இருக்கிறது. தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூக மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர்.திருமோகூர் சம்பவத்தை கண்டித்து மதுரையில் வருகிற 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, மதுரை திருமோகூர் அருகே நடந்த மோதலில் காயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும், திருக்குமார், பழனிக்குமார், செல்வக்குமார், மணிமுத்து ஆகிய 4 பேரையும் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.