தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்


தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
x

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் இணைப்பு ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், அரசு அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகள் முறையாக பணியாளர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. எனவே அனைத்து பணியாளர்களுக்கும் இ.சி.எஸ். மூலம் பணம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு அரசு ஊதிய சலுகைகள், அகவிலைப்படிகளை முறையாக வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை 7-வது கணக்கில் சேர்த்து வழங்க வேண்டும். மூன்று நிலை பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணி கொடை வழங்க வேண்டும்.

மேலும் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோட்டையை நோக்கி நடைபெற உள்ள பேரணியில் நாடு முழுவதும் உள்ள ஏராளமான பணியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட தலைவர்கள் சங்கர், திருநாவுக்கரசு மற்றும் நாகை விஜயலட்சுமி, தஞ்சாவூர் விஜயா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story