வி.ஏ.ஓ படுகொலை: காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது - கே.பாலகிருஷ்ணன்


வி.ஏ.ஓ படுகொலை: காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது - கே.பாலகிருஷ்ணன்
x

காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தில் வி.ஏ.ஓ வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே நேற்று (ஏப்ரல் 25) அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். கொலைக்கு பிந்தைய நடவடிக்கைகளும், நிவாரண அறிவிப்புகளும் பாராட்டத்தக்கவை.

அதே சமயத்தில், கிராம நிர்வாக அலுவலரின் படுகொலைக்கான காரணங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மணல் கொள்ளை குறித்து பலரும் காவல்துறையிடமும், வேறு வகைகளிலும் முறையிட்டுள்ளனர். காவல்துறை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டு கொலையாளிகளுக்கு பயந்து யாரும் எழுதி தர மறுத்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி துணிச்சலாக புகார் அளித்திருக்கிறார். கொலையாளிகளின் தன்மை தெரிந்த காவல்துறையினர் யாரும் எழுத்துப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் புகார் அளிக்க முன்வராத நிலையில் தைரியமாக முன்வந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு உரிய பாதுகாப்புகளை உத்தரவாதப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, முறப்பநாடு காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவர் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது. யாரும் முன்வராத சமயத்தில் இந்த வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்பது காவல்துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, இந்த பிரச்சனையில் காவல்துறையினர் உரிய முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளாமல் இருந்தது குறித்தும், லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகார் கொலையாளிகளுக்கு எப்படி தெரிய வந்தது என்பது குறித்தும் உரிய முறையில் விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தவிரவும் மாநிலம் முழுவதும் கனிம வளங்களை திருடுவோர் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடுபவருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு கனிம வளக் கொள்ளையர்கள் மீது உறவு வைத்துள்ள காவல்துறையினர் மற்றும் பிற துறைசார்ந்தோர் கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story