விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருசாபிஷேக விழா
விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருசாபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8.00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் யாகசாலை தீபாராதனை நடைபெற்றன. காலை 11 மணியளவில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி அம்பாள், சண்முகர், விநாயகர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமி அம்பாள், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீரால் கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.