வத்திராயிருப்பு வடபகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வர நடவடிக்கை
பிளவக்கல் அணையில் இருந்து வத்திராயிருப்பு வடபகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பிளவக்கல் அணையில் இருந்து வத்திராயிருப்பு வடபகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பிளவக்கல் அணை
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல், கோவிலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளின் மூலம் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. சிவகாசி தாலுகா மங்கலம் கண்மாய் வரை தண்ணீர் செல்கிறது. அணையில் பெருகும் தண்ணீர் பெரும்பாலும் வத்திராயிருப்புக்கு தென்பகுதி கண்மாய்கள் வழியாக கீழ்மடைவரை தண்ணீர் செல்கிறது.
கூட்டுறவு சங்கம்
ஒவ்வொரு ஆண்டும் வடபகுதி கண்மாய்கள் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை. தென்பகுதி கண்மாய்கள் செழிப்பான காலங்களில் 2 முறை பெருகுகிறது. இருந்தாலும் வடபகுதி கண்மாய்கள் வறண்டு விடுகிறது. இதற்கு காரணம் வராக சமுத்திரம் கண்மாயிலிருந்து செல்லும் திருத்தல் கால்வாய் முறையாக செப்பனிடாததும் தண்ணீரை பிரித்து வழங்காததும் தான்.
எனவே உடனடியாக திருத்தல் கால்வாயில் செப்பனிட்டு ஆலங்குளம், சுந்தரபாண்டியம், பெரியகுளம், செட்டிகுறிச்சி, திருமலைகுளம், மூவரை வென்றான் கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்திராயிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.