வீரசக்கதேவி ஆலய விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் வர வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்


வீரசக்கதேவி ஆலய விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் வர வேண்டும்;  ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் வர வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் வர வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 67-வது திருவிழா அடுத்த மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீர சக்கதேவி ஆலய குழுவினர், விழா கமிட்டியினர் மற்றும் ஜோதி எடுத்து வரும் விழா கமிட்டியுடன் ஆலோசனைக் கூட்டம் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவசுப்பு தலைமை தாங்கினார்.

விழாவிற்கு வாகனங்களில் ஜோதி கொண்டு வரும்போது ஒரு நபர் மற்றும் இளைஞர்கள் மட்டுமே ஜோதியுடன் நடந்து வர அனுமதிக்கப்படுவர், அவ்வாறு நடந்து வரும்போது ஆயுதங்கள் எடுத்து வர தடை விதிக்கப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து ஊமைத்துரை தொண்டர் படை சார்பாக எடுத்து வரப்படும் ஜோதியுடன் ஒரு வாள் மட்டும் எடுத்து வர அனுமதிக்கப்படுகிறது. ஜோதி எடுத்து வரும் நபர்கள் விழா கமிட்டியாளர்களால் அனுமதி பெற்று கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது

ஜோதி ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. விழாவில் கலந்துகொள்ள வருபவர்கள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களின் வழியாக மட்டுமே பாஞ்சாலங்குறிச்சிக்கு வர வேண்டும். விழாவிற்கு வாகனங்களில் ஜோதி கொண்டு வரும் நபர்கள் பற்றிய விவரத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கும், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்திற்கும் தெரிவிக்க வேண்டும். வாகனங்களில் மேற்கூரைகளில் அமர்ந்து செல்லக்கூடாது ஒலிபெருக்கி எதுவும் பொருத்தக் கூடாது. திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. விழாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும் பாஞ்சாலங்குறிச்சி சந்ததியினர் காலனிக்கு மேல்புறம் காவல்துறையினரால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஒத்துழைக்க வேண்டும்

மே 14 அன்று காலை மாட்டு வண்டி பந்தயம் மற்றும் இதர பூஜைகளையும் நடத்தி விழாவினை அமைதியாக முடித்துக் கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு விழா கமிட்டியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விழாவிற்கு வரும் நபர்கள் எக்காரணம் கொண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீரசக்க தேவி ஆலய விழாக்களை கண்ணியம் கட்டுப்பாடுடன் எவ்வித அசம்பாவிதம் இன்றி விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அனைத்து ஒத்துழைப்பையும் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுவினர் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜா, எபனேசர், வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருக பூபதி, செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story