வியாபாரிகள் சாலை மறியல்


வியாபாரிகள் சாலை மறியல்
x

தஞ்சையில் 100 ஆண்டுகள் பழமையான பூச்சந்தைக்கு நேற்று காலை பூக்கள் வராததால் போட்டி சந்தையை மூடக்கோரி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் 100 ஆண்டுகள் பழமையான பூச்சந்தைக்கு நேற்று காலை பூக்கள் வராததால் போட்டி சந்தையை மூடக்கோரி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பூச்சந்தை

தஞ்சை பூக்கார சுப்பிரமணியசாமி கோவில் அருகே பழமையான 100 ஆண்டுகளுக்கு மேலான பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் இந்த பூச்சந்தைக்கு தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக வருவது வழக்கம்.இந்த பூச்சந்தையில் மொத்தம் மற்ற சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது. இந்த பூச்சந்தையில் பூ வியாபாரிகள் என 50 பேரும், பூக்களை கட்டி விற்போர் என நூற்றுக்கும் மேற்பட்டோரும், பூமாலை வியாபாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் தொழில் நடத்தி வருகின்றனர்.

வேறு இடத்துக்கு சென்றனர்

இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூச்சந்தை நடத்துவதற்கான ஏலம் விடப்பட்டது. ஏலத்தை எடுத்தவர்கள் வியாபாரிகளிடம் தினமும் கூடுதல் தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்ததாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சாலையை அகலப்படுத்துவதாக கூறி பூச்சந்தையின் ஒரு பகுதியை இடித்தது,இதையடுத்து அங்கிருந்த பூச்சந்தை வியாபாரிகள், வேறு ஒரு இடத்துக்கு சென்று, விளார் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பூ வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பூச்சந்தையில் வியாபாரிகளுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டது. இதற்கிடையில் கோவில் நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் கோவில் நிர்வாகமே தினசரி வசூலில் இறங்கியது.

சாலை மறியல்

ஆனாலும் திருமண மண்டபத்துக்கு சென்று பூ வியாபாரம் செய்த வியாபாரிகள் மீண்டும் பழமையான பூச்சந்தைக்கு திரும்பவில்லை. எனவே, தஞ்சையில் 2 இடங்களில் பூச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியூரில் இருந்து பூ வியாபாரிகள் வழக்கம்போல் பூக்களை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான பழைய பூச்சந்தைக்கும், திருமண மண்டபத்தில் நடைபெறும் போட்டி பூச்சந்தைக்கும் பூக்களை அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியூர் வியாபாரிகள் அனுப்பிய பூக்கள் திருமண மண்டபத்தில் நடைபெறும் பூச்சந்தைக்கு மட்டுமே சென்றது. பழமையான பூச்சந்தைக்கு பூக்கள் வரவில்லை. இதனால் அங்கு தொழில் செய்து வரும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பூக்கள் வராததுக்கு காரணம் திருமண மண்டப பூ வியாபாரிகள் தான் என குற்றஞ்சாட்டி, போட்டி பூச்சந்தையை உடனடியாக மூட வேண்டும். இல்லையென்றால் பழமையான இடத்திலேயே பூ வியாபாரத்தை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதனால் தஞ்சாவூர் - விளார் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், ஆணையர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோட்டாட்சியர் நேரில் வந்து உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனைத்து பூ வியாபாரிகளையும் வரவழைத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story