கால்நடை மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு: அரியலூர் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை


கால்நடை மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு: அரியலூர் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை
x

கால்நடை மருத்துவப்படிப்பு தரவரிசை பட்டியலில் அரியலூர் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார்.

அரியலூர்

தரவரிசைபட்டியலில் முதலிடம்

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை 33 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். அரியலூரை சேர்ந்த ராகுல்காந்த், நந்தினி, வசந்தி, சக்திகுமரன் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். இதில், தரவரிசைபட்டியலில் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த ராகுல்காந்த் (வயது 18) முதலிடம் பிடித்தார்.

வறுமை சூழ்நிலையிலும் தமிழ்நாடு அளவில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை புரிந்த ராகுல் காந்த்துக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் ராகுல்காந்த்துக்கு அவரது பெற்றோர் இனிப்புகளை வழங்கிய தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மகிழ்ச்சி அளிக்கிறது

தற்போது ராகுல் காந்த் பெற்றோருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து மாணவர் ராகுல் காந்த் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது தந்தை முருகேசன் சைக்கிள் ரிப்பேர் கடையை நடத்தி வருகிறார். தாயார் தேவகி. எனது சகோதரி டயானா பி.எஸ்சி. முடித்துவிட்டு எம்.எஸ்சி. படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். நான் கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 588 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். மேலும் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களிலும் 100-க்கு நூறு மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்ேறன். இதையடுத்து பொறியியல் மற்றும் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். இந்தநிலையில் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எனது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பெரிதும் உறுதுணையாக இருந்தனர். மேலும் எனது பெற்றோர்கள் அவர்களின் வறுமை சூழ்நிலையிலும் என்னை படிக்க வைக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை தற்போது நிறைவேற்றி உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தாயார் மகிழ்ச்சி

இதுகுறித்து அவரது தாயார் தேவகி கூறும்போது ராகுல் காந்த் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பான். கால்நடை மருத்துவத்தில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தரவரிசை பட்டியலில் முதலிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனது மகனால் நாங்கள் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.


Next Story