நமச்சிவாயபுரத்தில் கிராமசபை கூட்டம்தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை


நமச்சிவாயபுரத்தில் கிராமசபை கூட்டம்தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்பொதுமக்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுரை
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:46 PM GMT)

நமச்சிவாயபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

கிராம சபை கூட்டம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் நமச்சிவாயபுரம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி கோவிந்தன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-

சிறுதானியங்களை அதிகம் பயிரிடவேண்டும்

உலக தண்ணீர் தினத்தையொட்டி முதன்முறையாக தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராம சபையின் முக்கிய கருப்பொருளே குடிநீருக்கான ஆதாரத்தை நிலைப்படுத்துதல், தண்ணீரை பாதுகாத்தல், தண்ணீர் பயன்பாட்டினை குறைத்தல், அனைத்து வீடுகளிலும் மழைநீரை சேகரித்தல் போன்ற பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுதானியங்களை அதிகஅளவில் விவசாயிகள் பயிரிட வேண்டும். கிராம சபையின் முக்கிய நோக்கமே கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும் தான் கிராம சபைகூட்டம் நடத்தப்படுகிறது.

தண்ணீரை சிக்கனமாக...

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். அதில், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டம் கிராம வளர்ச்சிக்காக செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். இத்திட்டங்களை மக்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். கோடை காலம் தொடங்கவுள்ளதால் கிராமபுறத்திலுள்ள பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகவும், விரையமின்றியும், பயன்படுத்தி நீர்மேலாண்மையான மழைநீர் அரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

எண்ணும் எழுத்தும் திட்ட விழிப்புணர்வு

பின்னர், கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமுத சுரபி வளர்ச்சி நிதியின் கீழ் 9 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலை, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் 3 குழுக்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்திற்கான காசோலை மற்றும் உற்பத்தியாளர் குழுவின் ஆதார நிதி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். முன்னதாக பள்ளிக்கல்வி துறை சார்பில், எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக அரசுப்பள்ளி மாணவிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன், இந்திராணி ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story