தியாகதுருகம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
தியாகதுருகம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய உச்சிமேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு காலை, மாலை நேரங்களில் மட்டும் டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த டவுன் பஸ் பழைய உச்சிமேடு கிராமத்திற்கு வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் டவுன்பஸ் பழைய உச்சிமேடு கிராமத்திற்கு வந்தது. இதுபற்றி அறிந்த கிராமமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அலுவலரிடம் பேசி வரும் காலங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முறையாக பஸ் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்ற கிராம மக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.