குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதி
தேவாலா அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
கூடலூர்
நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு வாழவயல் அருகே செத்தகொல்லி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதற்கிடையே பல ஆண்டுகள் ஆகியும் கிணற்றில் பராமரிப்பு பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக குடிநீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்குவது இல்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வனவிலங்குகளின் அச்சுறுத்தல்கள் உள்ள பகுதியில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் கிணற்றை முறையாக தூர்வார வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.