விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை:முகையூரில் 6 செ.மீ. கொட்டியது
விழுப்புரம் மாவட்டத்தில் முகையூரில் 6 செ.மீ. மழை கொட்டியது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில் இடையிடையே வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது.
கத்திரி வெயில் காலம் தொடங்கிய போதிலும் கடந்த 3 நாட்களாக வெயிலின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது. இதனிடையே கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இதனால் விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகள், தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 6.3 செ.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் ஏனைய பகுதியில் பதிவான மழைஅளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:- வளவனுார் 47, கோலியனூர் 34, கெடார் 33, முண்டியம் பாக்கம் 46, விழுப்புரம் 24, சூரப்பட்டு 30, வானூர் 60,திண்டிவனம் 52, செஞ்சி 58, வல்லம் 24, வளத்தி 54.