விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிலை ஊர்வலங்களில் திரளானோர் பங்கேற்றனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிலை ஊர்வலங்களில் திரளானோர் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள், ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு திருவாரூர் மாற்றுரைத்த விநாயகர் கோவில், சர்க்கரை விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

கோவில்களில் விநாயகருக்கு வெள்ளி கவசம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டனர்.

வீடுகளில் கொண்டாட்டம்

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து, அருகம் புல் சாத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.

திருவாரூர் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதன் பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலங்களில் திரளானோர் பங்கேற்றனர்.

நீடாமங்கலம்-திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞா கணபதி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதேபோல் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், கீழத்தெரு முருகன் கோவில் விநாயகர், மேலராஜவீதி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

திருத்துறைப்பூண்டி பவுண்டடி தெருவில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி சாமிக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நன்னிலம்

நன்னிலம் அருகே மூங்கில்குடியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வளப்பாற்றில் கரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கில்குடி கிராம மக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story