தண்டனை காலத்தை நிறைவு செய்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை -அன்புமணி ராமதாஸ்


தண்டனை காலத்தை நிறைவு செய்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை -அன்புமணி ராமதாஸ்
x

தண்டனை காலத்தை நிறைவு செய்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவர். நன்னடத்தை அடிப்படையில் பலர் 7 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆனால், வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய கைதிகள், அவர்களின் தண்டனை காலம் நிறைவடைந்தும் கூட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடிக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டசபையில் பா.ம.க. சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை.

போர்க்கால நடவடிக்கை

நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஆதிநாதன் குழு, ஒட்டுமொத்தமாக 264 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்தது. ஆனால், அவர்களில் 49 பேரை மட்டுமே, முதல்கட்டமாக, விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிறது.

இவர்களது விடுதலை தொடர்பாக இதுவரை கவர்னரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவர்கள் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

உடனடியாக அமைச்சரவையை கூட்டி நீதியரசர் ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்

முதல்-அமைச்சர் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழுவினர் கவர்னரை நேரில் சந்தித்து சிறைக்கைதிகள் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும்.

கவர்னர் தரப்பில் தாமதம் செய்யப்பட்டால், அவர்களை நிபந்தனையில்லாத சிறை விடுப்பில் அவர்களது இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story