மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் கொலையா?போலீசார் விசாரணை
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெயிண்டர் சாவு
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன் (வயது 62). பெயிண்டர். மனைவி, மகனை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் காதர் மொய்தீன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்து கிடந்த காதர் மொய்தீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகம்
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-
காதர் மொய்தீன் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பெண்களை வேலைக்கு அனுப்பி வருகிறார். இதற்கிடையில் ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியை சேர்ந்த பெயிண்டர் லோகேஷ் (34) என்பவருடைய மனைவி சுகன்யா என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். லோகேசும், காதர் மொய்தீனும் பெயிண்டர் என்பதால் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர்.
இதன் காரணமாக காதர் மொய்தீன், லோகேஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். இதனால் காதர் மொய்தீன் தான், தனது மனைவியை வேலைக்கு அனுப்பி உள்ளார் என்று சந்தேகம் அடைந்த லோகேஷ் நேற்று முன்தினம் மதுபோதையில் காதர் மொய்தீன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
முகத்தில் குத்து
பின்னர் லோகேஷ் தனது மனைவியை வேலைக்கு அனுப்பியது தொடர்பாக காதர் மொய்தீனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் லோகேஷ் தனது கையால் காதர் மொய்தீனின் முகத்தில் ஓங்கி குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் காதர் மொய்தீன் மூக்கில் ரத்தம் வழிந்தபடி மயங்கி விழுந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் இறந்துள்ளார். லோகேஷ் கையால் குத்தியதால் தான் காதர் மொய்தீன் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரியவரும். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.