மண்ணியாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கபிஸ்தலம் அருகே மண்ணியாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மண்ணியாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர் அணை
டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தது. பின்னர் கல்லணையில் இருந்து கொள்ளிடம், கல்லணைக்கால்வாய், வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே உள்ளிக்கடை ஊராட்சியில் உள்ள மண்ணியாறு தலைப்புக்கு காவிரி நீர் சென்றடைந்தது.
தண்ணீர் திறப்பு
இதை தொடர்ந்து மண்ணியாறு தலைப்பில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கும்பகோணம் உபகோட்டத்தின் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி, பாசன உதவியாளர் பாலாஜி, பாசன ஆய்வாளர் முருகன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதால் கடைமடை வரை நடைபெற்று வரும் குறுவை சாகுபடிக்கு இந்த பாசன நீர் பயன்படும்.
மண்ணியாறு தலைப்பில் இருந்து முதல்கட்டமாக 33 ஆயிரத்து 355 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெருவகையில் 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த தண்ணீர் பல்வேறு கிராமங்கள் வழியாக 58 கிலோமீட்டர் தூரம் வரை சென்றடையும். குறுவை சாகுபடிக்கு மண்ணியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.