மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...!


மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...!
x
தினத்தந்தி 26 July 2023 6:15 AM GMT (Updated: 26 July 2023 6:15 AM GMT)

மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2 ஆயிரத்து 500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் 12ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

பின்னர் நேற்று மதியம் 18 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. அதன் பிறகு மாலையில் 22 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இரு மாநில எல்லையான பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 6 மணிக்கு 3 ஆயிரம் கன அடியானது.

தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி பிலிகுண்டு பகுதிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 100 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்த இந்த புதுவெள்ளம் அருவிகளில் செந்நிறத்தில் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

இந்த தண்ணீர் இன்று மதியம் மேட்டூர் அணையை வந்தடையும் என தெரிகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு இன்று காலையில் நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று காலை 66.86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.80 அடியாக குறைந்தது.


Next Story