அ.தி.மு.க.வில் இணையமாட்டோம்: டி.டி.வி.தினகரன்
“அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என்றும், தி.மு.க. ஆட்சியின் சாயம் வெளுத்துவிட்டது” என்றும் டி.டி.வி.தினகரன் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜெயலலிதாவின் கொள்கைப்படி நடக்கும் ஒரே இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்தான். நான் அட்டைக்கத்தி வீசுபவன் இல்லை. ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்தவன். இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இதே உறுதியுடன் களம் காண்போம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அவர்கள் வியாபார நோக்கத்தில் செயல்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.
சாயம் வெளுத்துவிட்டது
இந்த ஒரு வருடத்தில் தி.மு.க. ஆட்சியின் சாயம் வெளுத்துவிட்டது. தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
குடும்பத்தலைவிகளுக்கு வழங்குவோம் என்று கூறிய மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியது. ஆனால் அதை இன்னும் செய்யவில்லை.
ஜெயலலிதா ஆட்சி
தேர்தலின் போது வாக்குறுதிகளை தந்துவிட்டு, மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? மத்திய அரசை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது. நமக்கு எந்த பயமும் இல்லை. விசாரணைக்கு கூப்பிட்டார்கள். போய் வந்தேன். நடவடிக்கை எடுத்தாலும் அதற்காக அஞ்சப்போவது இல்லை.
தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும். அதற்காக கிராமம், கிராமமாக செல்ல உள்ளேன். ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும் வரை இனி ஓயமாட்டேன். அ.தி.மு.க.வில் ஒரு போதும் இணையமாட்டோம். ஜனநாயக முறைப்படி அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.