எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலமாக அறிவிப்புதமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு வரவேற்புகள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கருத்து


தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:46 PM GMT)

எண்ணெய் வித்துகள் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த பட்ஜெட்டை வரவேற்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி


வேளாண் பட்ஜெட்

தமிழக அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான வரவு- செலவு கணக்கு பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை பட்ஜெட்டை (நிதி நிலை அறிக்கை), வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மூலம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல், விற்பனை, ஏற்றுமதிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட 12 மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் அறிவித்தல் மற்றும் கள்ளக்குறிச்சி உள்பட 25 உழவர் சந்தையை புதுப்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பரிவர்த்தனை கூடங்கள், உலர் களங்கள், சேமிப்பு கிடங்குகள் போன்றவசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரம்மதேசம் பகுதியில் டிராகன் பழம், அத்தி, ஆலிவ் போன்ற அதிக சந்தை வாய்ப்புள்ள பயிர்களை 1000 ஹெக்டேரில் விவசாயிகள் சாகுபடி செய்ய மானியமும், பயிற்சியும் அளிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த பட்ஜெட்டுக்கு விவசாயிகள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சியை சேர்ந்த அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்க தலைவர் ஷாயின்சா கூறும்போது:-

ஏமாற்றம்

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் பருத்தி நூற்பாலைக்கு தேவையான பஞ்சு தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடி நிதி ஒதுக்கி நீடித்த நிலையான பருத்தி இயக்கம் தொடங்க அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இதனால் பருத்தி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உண்டு. இதன் மூலம் பலர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். உழவர் சந்தைகளை புனரமைத்து அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவில் மரவள்ளி பயிர் உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளி கிழங்குகளை வெளி மாவட்டங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யும்போது அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜவ்வரிசி, கடுக்காய் தொழிற்சாலை அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வர பிரசாதமாகும்

சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யப்பன் கூறும்போது:-

பட்ஜெட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் அறிவித்தல், கள்ளக்குறிச்சி உள்பட 25 உழவர் சந்தையை புதுப்பிக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கியிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பருத்தி நூற்பாலைக்கு தேவையான பஞ்சு தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ரூ.12 கோடி நிதி ஒதுக்கி நீடித்த நிலையான பருத்தி இயக்கம் தொடங்குவதற்கான அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இது பருத்தி விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். தற்போது உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதாலும், கூலியாட்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாலும் என்னை போன்ற விவசாயிகள் லாபம் ஈட்டமுடியவில்லை. பட்ஜெட்டில் அறிவித்துள்ள ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. எனவே நெல் குவிண்டாலுக்கு 200 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 400 ரூபாயும் அறிவித்திருந்தால் பெரும் மகிழ்ச்சியாக அமைந்திருக்கும்.

குறைந்த வாடகையில் கரும்பு வெட்டும் எந்திரம்

முருக்கேரி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்:-

விழுப்புரம் மாவட்டம் முழுமையாக விவசாயத்தை சார்ந்த பகுதியாக உள்ளது. மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு டன் கரும்பை வெட்டி ஆலைக்கு எடுத்து செல்ல ரூ. 1800 செலவு ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக, இந்த பட்ஜெட்டில் கரும்பு வெட்டும் எந்திரம் குறைந்த வாடகைக்கு வழங்கபடும் என எதிர்பார்த்தோம். ஆனால் இது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இது மனதுக்கு மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்புக்கு அரசு 195 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொகை போதுமானது இல்லை. இதனை உயர்த்தி வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு என்பது குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் அனைத்து பயிர்களும் சேதமடையும் போது மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும்

அனுமந்தை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன்:- அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. குறிப்பாக புதுவித பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இதில் டிராகன் பழம், பேரீச்சை, அத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் புதுவித பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும். இருப்பினும் நெல் மூட்டைகளுக்கான ஊக்கத்தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். எண்ணெய் வித்துகள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல், விற்பனை, ஏற்றுமதிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்ததாகும்.

ரேஷன் கடையில் கேழ்வரகு

மேல்மலையனூரை சேர்ந்த பொன்னுரங்கம்:- தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை அந்த பயிரை விளைவிக்க ஊக்கப்படுத்துவதாக இருக்கும். நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும். இருப்பினும் இன்றைய வேளாண்மை பட்ஜெட் இயற்கை விவசாயத்தை பாதுகாக்கவும், பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கவும் போடப்பட்ட பட்ஜெட்டாகவே நான் கருதுகிறேன். இவ்வாறு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story