அடுத்து என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர் செல்வம்...! மீண்டும் முடக்கப்படுமா இரட்டை இலை...!
இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை
ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரட்டைத் தலைமைக்கு முடிவு வரும் நேரம் வந்துவிட்டது. அது ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவாவது உறுதியாகி விட்டது.
தற்போது இருக்கும் இரட்டைத் தலைமை பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையத்தின் பிரச்னையை சந்திக்க நேரிடும். ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னமும் முடக்கப்படலாம்.
ஏற்கெனவே இரட்டை இலை வழக்கில், சில சட்டச் சிக்கல்களை தினகரன் தரப்பு கையில் எடுத்துவரும் நிலையில், இரட்டை இலை விவகாரத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழன்சாமி தரப்பின் தற்போதைய செயல்பாடுகளால் மீண்டும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடங்குவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற விஷயத்தை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கையில் எடுக்கும். இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு வேண்டும் என எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடும். இதனால் இரட்டை இலைச் சின்னத்தை முடங்கும் நிலை ஏற்படும்.
இந்த இந்த நிலையில் இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூச்சல், குழப்பம், சர்ச்சை என நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும், 23 வரைவு தீர்மானங்களையும் நிராகரித்தது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறுகிறார்கள்.
முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்ட விவரங்கள்
* பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது.
* அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை கூடியது.
* கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
* எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இருந்து 9 மணிக்கு கிளம்பியவர் 11 மணிக்குத்தான் வானகரம் வந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அவரது கார் மெதுவாக ஊர்ந்து வந்தது.
* ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், வெல்லமணி நடராசன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேடையில் அமராமல் அவர்கள் கீழே இறங்கினர்.
* 9 நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்தித்து பேசிக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர் செல்வம்
* முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
* பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, தனது பேச்சை தொடங்கும்போதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.. அந்த தலைவர் எங்கே இருக்கிறார் அவர் விரைவில் வருவார் என மிக ஆவேசமாக பேசினார்.
* தமிழ் மகன் உசேன் அ.தி.மு.க.வின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னதாக இந்த அறிவிப்பின் போது அவர் மீது மாலை போட வந்த நிர்வாகிகளை.. இருங்கப்பா .. நீங்க வேற.. பேச விடுங்க என்று கோபமாக எடப்பாடி பழனிசாமி கடிந்து கொண்டார்.
* முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு, சங்கடம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும். ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" என்றார்.
* அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.கவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அ.தி.மு.க.வின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார்.
* சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு இது. கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான செயல்பாடு இது என்று வைத்தியலிங்கம் கூறிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம்,வைத்தியலிங்கம் வெளிநடப்புசெய்தனர்.சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் அறிவித்தார்.
* பாதியிலேயே எதிர்ப்பு தெரிவித்து மேடையில் இருந்து ஓ பன்னீர்செல்வம் வெளியேறி கார் நோக்கி சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர் செலவம் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.