ராஜபாளையம்: கோவிலை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி சாவு


ராஜபாளையம்: கோவிலை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி சாவு
x

ராஜபாளையத்தில் நிலத்தை விற்க கோவிலை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனி தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 35). இவர் தனியார் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இவரது வீட்டையொட்டி, இவருக்கு சொந்தமாக முன்னோர்கள் முதல் வழிபட்டு வந்த அம்மன் கோவிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா காலத்தில் சரிவர வேலை இல்லாததால் குருநாதன் கடன் தொல்லைக்கு ஆளானார். மேலும் அவர் மது பழக்கத்திற்கு ஆளாகி, மில்லுக்கு வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகளுடன் மீனா, தன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மனவருத்தம் அடைந்த குருநாதன், தனது குழந்தைகளுடன் போனில் பேசி வந்துள்ளார். அப்போது அவருடைய குழந்தைகள், அப்பா, அம்மா சேர்ந்து வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் வீடு மற்றும் கோவில் இருக்கும் நிலத்தை விற்று கடன்களை அடைத்து விட்டு, மனைவியின் சொந்த ஊரான கழுகுமலைக்கு சென்றுவிட குருநாதன் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே வீட்டையும், கோவில் இருக்கும் நிலத்தையும் சேர்த்து விற்க ஏற்பாடுகள் செய்து வந்தார்.

இந்தநிலையில் இடத்தை வாங்க வந்தவர்கள் கோவில் இருப்பதால் வாங்க சற்று தயக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவிலை இடித்துவிட்டு நிலத்தை சமப்படுத்தி விற்கும் நோக்கத்தில் நேற்று பூஜைகள் செய்து கோவிலில் உள்ள சாமி சிலைகளை அகற்றியதாக தெரிகிறது.

கோவில் சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கோவில் சுவரின் ஒரு பகுதி இடிந்து மொத்தமாக பெயர்ந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கிய குருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். குருநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story