சென்னையில் இடி-மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை
சென்னையில் இடி-மின்னலுடன் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சாரல் மழையுடன் நேற்று காலை பொழுது விடிந்தது.
அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் மழை பொழிய தொடங்கியது. நேரம் செல்லசெல்ல மழை வெளுத்து வாங்கியது. இடி-மின்னலும் மிரட்டியது.
இல்லங்கள் குளிர்ச்சியானது
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகம் இருந்தது.
மழையை எதிர்பார்க்காமல் மழை கோட், குடை எடுத்து வராமல் வெளியே வந்தவர்கள் நனைந்தபடி சென்றனர். மழையில் நனைந்துவிட்டால் காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும் என்பதை உணர்ந்து பலர் பஸ் நிறுத்தங்கள் உள்பட சில இடங்களில் ஒதுங்கினர். மழை சற்று ஓய்ந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
நீண்ட நேரம் நீடித்த மழை காரணமாக நகரம் குளிர்ச்சியானது. வீடுகளும் குளுகுளுவென்று இருந்தது. இதனால் பல வீடுகளில் நேற்றிரவு ஏ.சி., மின் விசிறிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
வியாபாரம் பாதிப்பு
மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் பாதித்து பரிதவிப்புக்கு உள்ளாகினர். சாலையோரம் வசிப்பவர்களும் எங்கே தஞ்சம் அடைவது என்று தெரியாமல் வேதனைக்கு உள்ளாகினர். கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த மழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.