தமிழ்நாடு என்று பெயர் சூட்ட யார் காரணம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாடு என்று பெயர் சூட்ட யார் காரணம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

‘தாய் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என பெயர் சூட்ட யார் காரணம்?' என்பது குறித்து ‘தமிழ்நாடு நாள்' விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை மாகாணம் என இருந்ததை 1968-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு என்று மாற்றி பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றிய நாளான ஜூலை 18-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.

மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரை

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி விழா பேரூரையாற்ற இருந்தார்.

கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் நேரடியாக விழாவில் பங்கேற்கவில்லை. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று (நேற்று) காலையில் தான் இல்லம் திரும்பினேன்.

தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருக்குமானால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளை தொடங்கி விடலாம்.

உடல் சோர்வு நீங்கிவிட்டது

கொரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்றாகி ஆகிவிட்டது.

இருந்தபோதிலும் இந்த விழாவில் காணொலி மூலமாக பேசுவதன் மூலமாக, உடல்சோர்வு நீங்கிவிட்டதாகவே நான் உணர்கிறேன்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாக போராட வேண்டியது இருந்தது. இறுதியாக, தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

மறந்திட வேண்டாம்

தி.மு.க. என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம் போல இதுவும், 'சென்னை பிரதேசம்' என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். தமிழ் - தமிழன் - தமிழ்நாடு என்ற உணர்ச்சியை உருவாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.

சமூகநீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - சமதர்மம் - மொழிப் பற்று - இன உரிமைகள் - மாநில உரிமைகள் - கூட்டாட்சித் தத்துவம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

'தமிழ்நாடு' என பெயர் சூட்ட எத்தனையோ தலைவர்கள் தங்களது உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். எத்தனையோ இயக்கங்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. அத்தனை தியாகிகளையும் இந்த தருணத்தில், நான் வணங்குகிறேன். உங்களது தியாகத்தை எந்நாளும் காப்போம் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முழக்கம்

இதன்பின்பு மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகளை உயர்த்தி, 'தமிழ்நாடு வாழ்க' என்றும், 'வாழ்க தமிழ் வெல்க தமிழ்நாடு' என்றும் 3 முறை முழக்கமிட்டார். இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களும் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

இதைத்தொடர்ந்து விழா அரங்கில் அமைச்சர் துரைமுருகன், ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு பவுன் தங்கம் ஆகியவற்றுடன் கூடிய 2021-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதை கு.சின்னப்பபாரதி சார்பில் அவரது மகள் கல்பனா மற்றும் கோணங்கி, கலியபெருமாள் ஆகியோருக்கு வழங்கினார்.

ரூ.2 லட்சம் பரிசுத்தொகை, ஒரு பவுன் தங்கம் ஆகியவற்றுடன் கூடிய தமிழ்தென்றல் திரு.வி.க. விருது கயல் (கோ) தினகரன், கபிலர் விருது பாவலர் கருமலை தமிழாழன் என்ற கி.நரேந்திரன், உ.வே.சா விருது டாக்டர் கலைக்கோவன், அம்மா இலக்கிய விருது சற்குணவதி, காரைக்கால் அம்மையார் விருது திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கு நடந்தது. தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் செய்தித்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முடிவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.


Next Story