மகளை கொன்று மகனுடன் தந்தை தற்கொலை செய்தது ஏன்? - வெளியான உருக்கமான தகவல்கள்
சேலத்தில் மகளை கொன்று தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 54). இவர், நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (48). இவர்களுக்கு ரிஷிகேசவன் (30) என்ற மகனும், பூஜா (26) என்ற மகளும் இருந்தனர். ரிஷிகேசவன் என்ஜினீயரிங் படித்துவிட்டு தந்தையுடன் தொழில் செய்து வந்துள்ளார். பூஜா பி.காம் படித்துவிட்டு கோவையில் சி.ஏ. தேர்வை எழுத தயாராகி வந்தார். சமீபத்தில் இவர் விடுமுறையில் சேலத்திற்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நிர்மலாவின் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. இதை பார்ப்பதற்காக அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு அங்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, வீட்டிற்குள் சென்றபோது, மரக்கட்டிலில் மகள் பூஜா இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயம் இருந்தது. அவரது அருகில் வெங்கடேஸ்வரனும், ரிஷிகேசவனும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு நிர்மலா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான உருக்கமான தகவல்கள்:-
தற்கொலை செய்த வெங்கடேஸ்வரனின் சொந்த ஊர் ஆத்தூர் அருகே மஞ்சினி ஆகும். அங்கு அவர் கிழங்கு மில் வைத்து வியாபாரம் செய்து வந்தார். அந்த மில்லில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு அவருக்கு சொந்தமாக இருந்த நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசிநாயக்கன்பட்டியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் குடியேறினார். பின்னர் அந்த வீட்டுக்கு அருகில் ஒரு நிலத்தை வாங்கி புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த வீட்டை முழுமையாக முடிக்காமல் 6 மாதத்திற்கு முன்பு குடியேறினார்.
இந்நிலையில், கெமிக்கல் வியாபாரம் செய்து வந்த வெங்கடேஸ்வரன், அந்த தொழிலை விரிவுபடுத்த பலரிடம் கடன் வாங்கி உள்ளார். அதன்பிறகு பணம் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொழில் சரியாக இல்லாததால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே செய்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுடன், தற்போது செய்து வந்த தொழிலில் போதிய வருமானம் இல்லாததாலும் வெங்கடேஸ்வரன் விரக்தி அடைந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வெங்கடேஸ்வரனும், ரிஷிகேசவனும் பூஜாவை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை கட்டிலில் போட்டுவிட்டு தந்தை, மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், வெங்கடேஸ்வரன் ஒரு நோட்டில் யார்? யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பது தொடர்பாக விவரமாக எழுதி வைத்துள்ளார். இதனால் கடன் தொல்லையால் அவர் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்த நோட்டை போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த நோட்டில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களில் யாராவது அவரை கடன் தொகையை கேட்டு மிரட்டினார்களா? என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடைசியாக அவர் யாரிடம் செல்போனில் பேசினார்? என்ற தகவலையும் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.