டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி


டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தமிழக மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவினை எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி 'தினத்தந்தி' நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்னரே நாங்கள் நேரம் கேட்டு இருந்தோம். இந்தநிலையில், அமித்ஷா அலுவலகத்தில் இருந்து கடந்த 20-ந்தேதியன்று (நேற்று முன்தினம்) காலை 11 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தேன். அந்த திட்டத்துக்கான பணிகள் எதுவும் தற்போது நடக்கவில்லை.

தி.மு.க. அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. எனவே கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். காவிரி ஆற்றில் பல இடங்களில் மாசுபட்ட நீர் கலக்கிறது. இவ்வாறு மாசுபடும் நீர் பொதுமக்கள் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தமுடியாத வகையில் உள்ளது. காவிரி நதியை சீரமைப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடியிலான, 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை கங்கை புனரமைப்பு திட்டம் போன்று, தேசிய திட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

அரசியல் பேசவில்லை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் தடை இல்லாமல் கிடைக்கிறது. இதனை தடுப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், லாவண்யம் தாண்டவம் ஆடுகிறது.

எந்த துறையை எடுத்தாலும் 'கமிஷன்', 'கலெக்சன்', 'கரப்சன்' மட்டுமே இருக்கிறது. எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவும் இல்லை. ஒட்டுமொத்தமாக தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர், மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதுபற்றி அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இதேபோல தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அரசியல் குறித்து அவரும் கேட்கவில்லை, நானும் பேசவில்லை. அமித்ஷா உடனான சந்திப்பின்போது, தமிழக மக்களின் நலன்சார்ந்த விஷயங்களை பற்றி மட்டுமே பேசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story