ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x

ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்வதற்கான அவசர தடை சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை


ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்வதற்கான அவசர தடை சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து மதுரையில் அவர் கூறியதாவது:-

தீர்மானம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை. இந்த சூதாட்டத்தை ரத்து செய்வதற்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

இந்த சட்டம், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உரிய ஆதாரங்களை தி.மு.க. அரசு சமர்ப்பிக்காததால் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது.

அமல்படுத்த வேண்டும்

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், அதற்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். மேலும் அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் இதுவரை இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இந்த சூதாட்ட தடை சட்டத்தை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத்தினுடைய வலிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story