மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானைகள்


மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்தன.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்தன.

காட்டு யானைகள்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. அவ்வப்போது காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. அவை மலை ரெயிலை மறிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மலை ரெயில் சென்றது. அப்போது காட்டேரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் உலா வந்ததோடு, மலை ரெயிலை வழிமறித்தது.

போக்குவரத்து பாதிப்பு

அதன் பின்னர் யானைகள் தண்டவாளத்தில் இருந்து அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதனால் 15 நிமிடம் தாமதமாக மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு சென்றது. நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டேரி அருகே சாலையை கடந்து செல்வதற்காக 3 காட்டு யானைகள் வந்தன. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் யானைகள் காட்டேரி ரெயில் பாதைக்கு சென்றன. அங்கிருந்து குடியிருப்புக்குள் நுழைய முயன்ற காட்டு யானைகளை வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். அப்பகுதிக்கு மீண்டும் காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story