விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x

குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதி விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.

வேலூர்

காட்டு யானைகள் அட்டகாசம்

ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள கவுண்டன்யா யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகள் அடிக்கடி தமிழக வனப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன், அந்த யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் குடியாத்தத்தை அடுத்த கொட்டமிட்டா கிராமத்தில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் தலா மூன்று யானைகள் இரண்டு குழுக்களாக குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இரவு நேரம் என்பதால் கிராம மக்கள் அருகே செல்ல அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் வரவில்லை

இரவு 10 மணி வரை வனத்துறையினர் யாருமே கொட்டமிட்டா பகுதிக்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போன் எடுப்பதில்லை. எடுக்கும் ஓரிரு வனத்துறையினர் வருகிறேன் வருகிறேன் என்று கூறி விட்டு வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேளங்கள் அடித்தும், பட்டாசு வெடித்தும் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழையா வண்ணம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினரின் அலட்சியப் போக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் யானைகள் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story