அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா?


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

கூத்தாநல்லூர் ரேடியோபார்க் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, மேல்கொண்டாழி, பண்டுதக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் காய்ச்சல் மற்றும் ஏனைய நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், இந்த நகர்ப்புற சுகாதார நிலையம் உள் பகுதியில் சிறிய அளவிலான ஒரு அறையை வைத்தே மருத்துவம் பார்க்கப்படுகிறது. வெளி பகுதியில் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு பெரும்பாலும் கூரை அமைக்கப்பட்ட வெளி பகுதியில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கூடுதல் கட்டிடம் வேண்டும்

அதேபோல், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து கொள்வதற்கு ஏதுவாக போதுமான அறைகள் இல்லாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், மருந்துகள் வழங்குவதற்கும், ஊசி போடுவதற்கும் போதுமான அறைகள் இல்லாமல் உள்ளது. இதனால், நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ள சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே கூத்தாநல்லூர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் அனைத்து அறைகள் கொண்ட வசதியுடன் புதிதாக ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story