பலகார பொருட்கள், பட்டாசுகள் விலை உயர்வால் தீபாவளி களைகட்டுமா? பொதுமக்கள் கருத்து


பலகார பொருட்கள், பட்டாசுகள் விலை உயர்வால் தீபாவளி களைகட்டுமா? பொதுமக்கள் கருத்து
x

பலகார பொருட்கள், பட்டாசுகள் விலை உயர்வால் தீபாவளி களைகட்டுமா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை. தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். மேலும் வீட்டில் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து அண்டை வீட்டாருடன் பகிர்ந்து சாப்பிடுவார்கள். இப்படி சிறப்பு மிகுந்த தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் புத்தாடை வாங்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களை கட்டியுள்ளது.

பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதில் காட்டும் ஆர்வம் வீட்டில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பருப்பு-மாவு வகைகள்

கரூரில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்) :- துவரம் பருப்பு ரூ.110 முதல் ரூ.125 வரை விற்பனையாகிறது. உளுந்தம்பருப்பு ரூ.120 முதல் ரூ.140 வரையும், பாசிபருப்பு ரூ.110 முதல் விற்பனையாகிறது. பூண்டு ரூ.80 முதல் ரூ.140 வரையும், கடலை பருப்பு ரூ.80 முதல் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

வெல்லம் ரூ.50 முதல் ரூ.60 வரையும், மிளகு ரூ.500 முதல் ரூ.700 வரையும் விற்கிறது. ரூ.300-க்கு விற்பனையான சீரகம் தற்போது ரூ.350 முதல் ரூ.400 வரையும், ரூ.300-க்கு விற்பனையான சோம்பு ரூ.350-க்கும், ரூ.90-க்கு விற்பனையான கடுகு ரூ.120 முதல் ரூ.130 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏலக்காய் ரூ.1,500 முதல் ரூ.2500 வரை விற்பனையாகிறது. முந்திரி ரூ.600 முதல் ரூ.750 வரையும், உலர்திராட்சை ரூ-.250 முதல் ரூ.300 வரையும், வெந்தயம் ரூ.100 முதல் ரூ.120 வரையும், மல்லி ரூ.160 முதல் 170 வரையும், நாட்டுமல்லி ரூ.200-க்கும் விற்பனையாகின்றன. மிளகாய் ரூ.250 முதல் ரூ.290-க்கும், புளி ரூ.120 முதல் ரூ.200 வரையும் விற்பனை ஆகின்றன. இதேபோல் மாவு வகைகளை பொறுத்தவரை மைதா மாவு ரூ.45 முதல் ரூ.50-க்கு விற்பனையாகிறது. ரூ.54-க்கு விற்பனையான கோதுமை மாவு ரூ.60- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடலை மாவு ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கரூரை பொறுத்தவரை ஒருசில மளிகை பொருட்கள் மட்டுமே தற்போது விலை அதிகரித்து உள்ளது. பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை அதிகரிக்காமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்ற விலையிலேயே விற்பனையாகிறது. இதில் 2-ம் கட்ட மற்றும் 3 ம் கட்ட வியாபாரிகளிடம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எண்ணெய் விலை

பலகாரங்கள் செய்வதற்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் மட்டும் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்துள்ளன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.140-க்கு விற்ற 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.155-க்கும், ரூ.90-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் ரூ.100-க்கும் விற்பனையாகின்றன. இதேபோல் 1 லிட்டர் நல்லெண்ணெய் ரூ.295-க்கும், கடலை எண்ணெய் ரூ.195-க்கும், நெய் ரூ.682-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.165-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலை அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் விற்பனையாகிறது என்றும், மற்ற எண்ணெய்களின் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் விலை விவரம்:- நல்லெண்ணெய் ரூ.300-க்கும், கடலை எண்ணெய் ரூ.220-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.210-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காரம் மற்றும் இனிப்புகள்

தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் பலகாரங்கள் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், கடைகளில் விற்கப்படும் காரம் மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிட்டு மகிழ்பவர்கள் ஒருபுறம் உள்ளனர். அந்தவகையில் சிறிய கடைகளில் கரூரில் பல்வேறு இடங்களில் ஆர்டர்கள் பெற்று கார வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் 1 கிலோ கார வகைகள் ரூ.200 முதல் ரூ.300 வரை கடைகளுக்கு ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் மிக்சர் உள்ளிட்ட காரவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் இனிப்பு வகைகள் 1 கிலோ ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதில் லட்டு, மைசூர்பாகு, பாதுசா, ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு வகைகள் விற்பனையாகிறது. இனிப்பு வகைகளில் பால் பொருட்களான பால்கோவா, சோன்பப்டி உள்ளிட்டவைகள் 1 கிலோ ரூ.400 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் முறுக்கு, மெதுவடை, பருப்பு வடை உள்ளிட்டவைகளும் ஆர்டர்கள் மூலம் தயார் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ரூ.5 முதல் ரூ.7 வரை ஒன்றின் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஆர்டர் குறைந்து அளவு வந்துள்ளன

இதுகுறித்து கரூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

கரூர் ஜவகர்பஜாரை சேர்ந்த ஜெகதீஸ் கூறும்போது, பல ஆண்டுகளாக இனிப்பு, கார வகைகள் ஆர்டரின் பேரில் பெற்று தயார் செய்து கொடுத்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு அதிகளவிலான ஆர்டர்கள் வந்தன. ஆனால் இந்தாண்டு ஆர்டர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே வந்து உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ஆர்டர்கள் சிறப்பாக இருந்தன.

இந்தாண்டு ஆர்டர்கள் சுமாராக தான் உள்ளன. வரும் நாட்களில் ஆர்டர்கள் அதிகளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரம் மற்றும் இனிப்பு வகைகளை செய்து வருகின்றோம். மளிகை பொருட்களை பொறுத்தவரை பெரியஅளவில் விலை ஏற்றம் எதுவும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு விற்பனை செய்த அதே விலையில்தான், தற்போதும் விற்பனை செய்து வருகிறோம். டெக்ஸ்டைலில் தற்போது வேலைவாய்ப்புகள் இல்லாததால், அதிகளவிலான ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

விலை உயர்ந்துள்ளது

கரூரை சேர்ந்த ஆயில்மில் துரைராஜ் கூறும்போது, செக்கு எண்ணெய் விற்பனையை பொறுத்தவரை மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு விற்பனை குறைவாகவே உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் அதிகமாக வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடந்த ஆண்டை விட தற்போது செக்கு எண்ணெய்களின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. செக்கு எண்ணெய்களை பொறுத்தவரை வீடுகளில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற நாட்களை விட தீபாவளி பண்டிகைக்கு எண்ணெய் அதிகமாக விற்பனையாகும்.

சிறப்பாக கொண்டாட உள்ளோம்

தாந்தோணிமலையை சேர்ந்த குடும்ப தலைவி விஜயலெட்சுமி கூறும்போது, பண்டிகைகள் என்பது நாம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம் ஆகும். அப்போது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடித்தமான உணவுகள், பலகாரங்கள் செய்து அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மிகுந்த மகிழ்ச்சி. கடந்த ஆண்டை விட தற்போது ஒருசில மளிகை பொருட்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. சில பொருட்களின் விலை குறைந்தும் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இந்த வருடம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் வரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

ஜவுளி-பட்டாசு விலை உயர்வு

கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மேலாளர் கெவின் கூறும்போது, தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான புது புது டிசைன்கள் வந்துள்ளன. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கு அதிகளவிலான டிசைன்களில் உள்ளன. இதேபோல பெண்களுக்கு புதுவிதமான டிசைன்களில் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கு சேலை ரகங்கள், சுடிதார் ரகங்கள், குர்திஸ், சல்வார் போன்றவைகளும், ஆண்களுக்கு ஆண்களுக்கு வேட்டி ரகங்கள், கேசுவல் சர்ட், டிஜிட்டல் பிரிண்ட் சர்ட், ஜீன்ஸ் பேண்ட், கார்கோ பேண்ட் உள்ளிட்ட ரகங்களும் உள்ளன. பெண் குழந்தைகளுக்கு கிக் வெஸ்டர்ன், வெண்ணிலா மிடி, ஹம்பர் வெஸ்டர்ன் சுடி ரகங்களும், ஆண் குழந்தைகளுக்கு ஹாட்ரிக் புல்சூட், குட்லக் கோட்சூட், பேன்சி கோட்சூட், டிராயர் சர்ட் செட் உள்ளிட்ட ரகங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஜவுளிகளின் விலை அதிகரித்துள்ளது. தீபாவளி விற்பனை வழக்கம்போல் உள்ளது. கரூரில் டெக்ஸ்டைல்சில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. இல்லையென்றால் விற்பனை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

பட்டாசுகள் விலை உயர்வு

பட்டாசு கடை வியாபாரிகள் கூறும்போது, தீபாவளி என்றாலே பட்டாசு தான். தற்போது ஏராளமான பேன்சி பட்டாசுகள் வந்துள்ளன. வெடி வகைகளை விட பேன்சி பட்டாசுகள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. பொதுமக்களும் பேன்சி ரகங்களை விரும்பி வாங்குகின்றனர். இப்போதுதான் பட்டாசு விற்பனை ஆரம்பமாகிறது. இன்னும் தீபாவளிக்கு சில நாட்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த ஆண்டை விட 15 சதவீதம் வரை பட்டாசுகள் விலை உயர்ந்துள்ளது.


Next Story