'டிரோன்' கேமராக்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?


டிரோன் கேமராக்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?
x
தினத்தந்தி 3 July 2023 7:45 PM GMT (Updated: 3 July 2023 7:45 PM GMT)

பழனி மலைக்கோவில் பகுதியில் ‘டிரோன்' கேமராக்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பின்பு மலைப்பகுதியில் இருந்து கொடைக்கானல் மலைத்தொடர், பழனி நகர் ஆகியவற்றை தங்கள் செல்போனில் படம் பிடித்து செல்வது வழக்கம்.

எனவே பக்தர்கள் 'செல்பி' எடுத்து மகிழ அடிவாரம் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் 'செல்பி ஸ்பாட்' உள்ளன. கோவில் பகுதியில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி நிர்வாகம் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கோவில் பகுதியில் மூலவர் மற்றும் சாமி சிலைகளை படம் எடுப்பதை தடுக்கும் வகையில் செல்போன், கேமரா பயன்படுத்த தடை உள்ளது. இதை தடுக்க கோவிலில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி சிலர் செல்போனில் படம் பிடித்து செல்வது தொடர் கதையாக உள்ளது.

'டிரோன்' கேமரா

இது போதாதென்று தற்போது 'டிரோன்' கேமராக்களில் பழனி முருகன் கோவில் மற்றும் இடும்பன் மலைக்கோவிலை உயரத்தில் இருந்து படம், வீடியோ எடுப்பது நடந்து வருகிறது. பழனி மலைக்கோவில் பகுதியில் பாதுகாப்பு கருதி 'டிரோன்' கேமரா' பறக்க தடை உள்ளது.

ஆனால் அந்த தடை எல்லாம் தற்போது காற்றில் பறந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு, கடந்த சில நாட்களாக பழனியில் 'டிரோன்' கேமராவை கொண்டு படம் பிடிக்கப்படுவது நடந்து வருகிறது. இவ்வாறு எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர்.

இது, கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது. எனவே பழனி அடிவாரம் மற்றும் மலைப்பகுதியில் 'டிரோன்' கேமராக்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story