பூனைக்கு மணிகட்டும் நேரம் வந்துவிட்டது: "இந்த வாட்சை வைத்து ரூ. 2 லட்சம் கோடியை வெளியே கொண்டு வர வேண்டும்" - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
எனது வாட்சுக்கு பில் மட்டுமின்றி, நான் பணியிலிருந்த போது சம்பாதித்த அனைத்து ஆவணத்தையும் சமர்பிக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாற்று கட்சியினர் புதியதாக பாஜகவில் இணையும் நிகழ்வு திருப்பூர் கோவில்வழி பகுதியில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
13 ஆண்டுகள் சம்பாதித்த முழு கணக்கையும் கொடுக்கிறேன். எனக்கு ரூ 18 லட்சம் முதல் ரூ 1 கோடி வரை சம்பளம் வந்துள்ளது. ரூ 13 லட்சத்துக்கு கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன்.
ஊழலை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக. கடந்த 75 ஆண்டுகளாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தாம் செய்யப்போவதாக அண்ணாமலை கூறினார். ரபேல் வாட்ச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக தாம் வேலை பார்த்தபோது பெற்ற ஊதியம், அதற்கான செலவு விபரங்கள், கிரெடிட் கார்டு பில் விபரங்கள் உள்பட தமது சொத்து விபரங்கள் அனைத்தையும் வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து தமது சொத்துப்பட்டியல் மட்டுமல்லாது, திமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களின் உண்மையான சொத்து மதிப்பு, பினாமி பெயரில் வாங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பு ஆகியவற்றை தனி இணையத்தளம் தொடங்கி அதில் தாம் வெளியிடப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பால் லிட்டருக்கு ரூ.12 உயர்ந்துள்ளதால் அந்த பாலை மக்கள் வாங்க முடியவில்லை. இதனால் நாளொன்றுக்கு ஆரஞ்ச் பால் விற்பனை 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. ப்ளூ பாக்கெட் வாங்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆரஞ்ச் பாக்கெட் பாலில் இருப்பதை போன்று ப்ளூ பாக்கெட்டில் புரதச் சத்துகளும் கொழுப்பு சத்துகளும் இல்லை.ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஆரஞ்ச் நிற பாக்கெட் பாலை உண்டால்தான் சத்தாக இருப்பர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் மிகவும் முக்கியமானது. கடந்த ஆண்டு பால் 36 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.