கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு
அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்காதல்
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை அடுத்த நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45), கொத்தனார். இவருடைய மனைவி மேரி சைலஜா (40). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் ஜார்ஜ் வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த மேரி சைலஜா கள்ளக்காதலை கைவிடும்படி ஜார்ஜை கண்டித்தார். இதனை தொடர்ந்து அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
அடித்தார்
கடந்த 27-ந் தேதி கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் திடீரென்று மனைவியை தாக்கியுள்ளார். இதில் மேரி சைலஜா மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், மேரி சைலஜாவை அஞ்சுகிராமம் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேரி சைலஜா சேர்க்கப்பட்டார். அங்கு அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு 6-ந் தேதி மேரி சைலஜா நினைவு திரும்பினார். அப்போது அவர் தாயார் ராஜமிடம் கணவருடன் நடந்த தகராறு மற்றும் தாக்கிய விவரங்களை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ஜார்ஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மேரி சைலஜா சிகிச்சை பலனின்றி திடீரென்று பரிதாபமாக இறந்தார்.
கைது
அதைத்தொடர்ந்து ஜார்ஜை சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.