கல்வி கற்பதில் பெண்களுக்கு அதிக ஆர்வம்
கல்வி கற்பதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டை,
கல்வி கற்பதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
விலையில்லா சைக்கிள்
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 2,585 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கண்கள்
நாங்கள் படிக்கும் காலத்தில் படிப்பதற்கு தேவையான வசதிகள் இல்லை. அந்த காலகட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தாலே அதனை பெரிய படிப்பாக நினைத்தனர். தற்போது கல்வி கற்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்கு அரசும் ஒரு காரணம் ஆகும். நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் படிப்பதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் என்பதை கருத்தில் கொண்டு இரண்டையும் இரண்டு கண்களாக பார்க்கிறார். அரசு வழங்கக்கூடிய விலையில்லா சைக்கிளை படிக்கும் காலத்திலும், படித்த பின்பும் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தரமானதாக வழங்கி வருகிறோம்.
அனைத்து உதவி
மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள் தரமாக உள்ளதா என்பதை பார்வையிட்ட பின்பு அதனை வழங்க எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வரும் காலங்களில் நீங்கள் படிப்பதற்கு தேவையான. அனைத்து உதவிகளையும் செய்து தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தாசில்தார் அறிவழகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் கவிதா, காந்திமதி, வார்டு செயலாளர்கள் மணிராஜ், ராஜசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தராஜன், தங்கரதி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.