மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது


மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது
x

தாரமங்கலம் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் நகைக்காக மூதாட்டியை கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் நகைக்காக மூதாட்டியை கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மூதாட்டி கொலை

தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி இரவு அங்குள்ள விவசாய தோட்டத்தில் இருந்த ஒரு மின்மோட்டார் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகைக்கு ஆசைப்பட்டு தனது உறவினரான மூதாட்டி சின்னம்மாளை துட்டம்பட்டி கரட்டுக்காட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (37) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான சுப்பிரமணி போலீசாரிடம் அளித் தபரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணம் ஆகி அய்யம்மாள் என்ற மனைவியும், சந்திரா (12), சரண்யா (10), சந்தோஷ் (8) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். தறித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்ததால் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தேன். இதனால் பணம் நகைக்கு ஆசைப்பட்டு எனக்கு பெரியம்மா உறவுமுறை கொண்ட சின்னம்மாளை அவரது தோட்டத்திற்கு தேங்காய் பறித்து கொடுப்பதாக கூறி எனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றேன்.

அங்கு தேங்காய் பறித்து கீழே இருந்த சின்னம்மாளின் தலைமீது போட்டதால் அவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். அப்போது கீழே விழுந்த சின்னம்மாளை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மோட்டார் அறைக்குள் கொண்டு சென்று போட்டு கழுத்து மற்றும் கை, காலில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கட்டிங் பிளேடு மூலம் கட் செய்து எடுத்துக்கொண்டேன்.

நகை மீட்பு

மேலும் அவரது சுருக்கு பையில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டேன். பின்னர் மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக நம்ப வைக்க அருகில் இருந்த மின்சார வயரை எடுத்து கழுத்தை சுற்றி இறுக்கி வைத்து விட்டு பணம், நகைகளை எடுத்துக்கொண்டு இனிமேல் தனது கடன்களை அடைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தப்பி சென்றுவிட்டேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

விசாரணையில் 17 பவுன் நகைகளை சுப்பிரமணி, தனது மோட்டார் சைக்கிளில் டூல்ஸ் பாக்சில் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை போலீசார் மீட்டனர்.


Next Story