'ரெயின்கோட்' அணிவித்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய தொழிலாளி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


ரெயின்கோட் அணிவித்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய தொழிலாளி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
x

மழையில் நனைந்து குளிரில் நடுங்குவதை பார்க்க மனமின்றி: ‘ரெயின்கோட்’ அணிவித்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய தொழிலாளி -சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் தாந்தோணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது இவரிடம் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது. கணேசனுக்கு ஆடுகள் மழையில் நனைந்து குளிரில் நடுங்குவதை பார்க்க மனமில்லை.

மேய்ச்சலுக்கு போகும் ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆட்டுக்கு 'ரெயின்கோட்' அணிவிக்கலாம் என யோசனை தோன்றியது. இதையடுத்து கணேசன், அரிசி மூட்டைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்கினை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு அணிவித்தார்.

அந்த மழைகோட்டுடன் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன. இதனால் ஆடுகள் மழையில் நனையாமல் செல்கின்றன. மேலும் பிளாஸ்டிக் சாக்கால் ஆன மழை கோட்டுகள் குளிரில் இருந்து ஆடுகளை பாதுகாப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. ஆடுகள் அனைத்தும் 'ரெயின்கோட்' அணிந்தபடி ஒன்று போல மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.

இந்த செயலை பார்த்தவர்கள் அவரை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். 'ரெயின்கோட்' அணிந்து ஆடுகள் வரிசையாக மேய்ச்சலுக்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story