போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர்
குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 8,886 போ் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை.
போலீஸ் எழுத்து தேர்வு
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் (ஆண்-பெண்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 11,867 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் 2,981 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 8,886 பேர் தேர்வு எழுதினர்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி, ஆரல்வாய்மொழி ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரி, ஆரல்வாய்மொழி டி.எம்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை லயோலா என்ஜினீயரிங் கல்லூரி, சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது. இதில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் பெண்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது.
அனுமதி சீட்டு
இந்த தேர்வானது காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடந்தது. பெரும்பாலானோர் காலை 8 மணிக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து 8.30 மணியில் இருந்து தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக்கியமாக தேர்வர்களின் அனுமதி சீட்டை பரிசோதித்த பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக தேர்வு மையம் முன் நீண்ட வரிசை காணப்பட்டது.
பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத பெண்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். ஒரு சில பெண்கள் கை குழந்தையுடன் வந்திருந்தனர். தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன்பு குழந்தையை உறவினர்களிடம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பெற்றோரும், உறவினர்களும் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.
ஐ.ஜி. ஆய்வு
தேர்வு எழுத சில பெண்கள் கைகெடிகாரம் அணிந்து வந்தனர். ஆனால் பரிசோதனையில் ஈடுபட்ட போலீசார், கை ெகடிகாரத்தை கழற்றுமாறு கூறினர். இதையடுத்து பெண்கள் தாங்கள் அணிந்திருந்த கை கெடிகாரத்தை கழற்றி தனியாக ஒதுக்கப்பட்டு இருந்த மேஜையில் வைத்து விட்டு சென்றனர். மேலும் செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதே போல பென்சில் கொண்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.
தோ்வானது பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் நடந்தது. தேர்வு மையத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. முருகன் ஆய்வு செய்தார். இதுபோல் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற தேர்வை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர், 'எந்த விதமான குளறுபடிகளும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்' என்று தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.