போலீசாருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க யோகா பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்


போலீசாருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க யோகா பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
x

போலீசாருக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

போலீசாருக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

ஊர்க்காவல் படை குடும்ப விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 383 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் வாக்குப்பதிவு, திருவிழா, அரசியல் கூட்டங்கள், போராட்டங்கள், பேரிடர் மீட்பு பணிகளின் போது போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் குமரி மாவட்ட ஊர்க்காவல் படை ஆண்டு விழா மற்றும் குடும்ப சந்திப்பு விழா நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கமாண்டர் பிளாட்பின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஊர்க்காவல் படை சரக கமாண்டர் பிரகாஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அதிகாரி இளையராஜா, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மாயகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் பெஞ்சமின், பிரவீன் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகளின் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

யோகா பயிற்சி

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்காக பணியாற்றும் போலீசார், ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை பணியாளர்களும் தங்களது பணிகளில் சிறந்து செயல்பட வேண்டியது அவர்களது கடமை. கடமை ஒருபுறம் இருந்தாலும் அவர்களது குடும்பங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ஊர்க்காவல் படை மற்றும் போலீசார் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் செலவழிக்கும் நேரம் குறைவாக இருக்கும்.

பணியின்போது மன அழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்ட போலீசாருக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், யோகா பயிற்சி, குடும்ப விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிக நேரம் செலவு செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும். தற்போது ஊர்க்காவல் படையுடன் போலீசார் நடத்திய இந்த குடும்ப சந்திப்பு விழாவின் நோக்கம் போலீசாருக்கும் ஊர்க்காவல் படையினருக்கும் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.

இதேபோல் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊர் காவல் படை அதிகாரி மைதிலி, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாம் வேதமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.


Next Story