அஜித் ரசிகர் மரணம்: இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி


அஜித் ரசிகர் மரணம்: இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும்:   டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
x

டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள 'ரோகிணி' தியேட்டரில் 'துணிவு', 'வாரிசு' ஆகிய 2 படங்களும் வெளியிடப்பட்டது. இதில் 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கும், 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் வெளியானது.

'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து அஜித் ரசிகர்கள் 'ரோகிணி' தியேட்டரில் குவிந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமார் (வயது 19). ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அஜித் ரசிகரான பரத்குமாரும் 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் 'ரோகிணி' தியேட்டருக்கு வந்திருந்தார். திரையரங்கிற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு முன்பு தியேட்டர் வளாகத்தில் அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம், பாட்டம் என உற்சாகத்துடன் இருந்தனர்.

அந்த பகுதி முழுவதும் அஜித் ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் தியேட்டர் முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றது.

அப்போது உற்சாக மிகுதியால் பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டுவடம் உடைந்துபோனதால் வலியால் துடித்தார்.

இதை பார்த்து அவரது நண்பர்களும், படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பரத்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். பலியான பரத்குமார், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது தந்தை ஜானகிராமன், கூலி வேலை செய்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான பரத்குமார், கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அஜித்தின் தீவிர ரசிகரான அவர், 'துணிவு' படத்தை முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என வந்தபோது பலியாகி விட்டது தெரிந்தது.

இந்தநிலையில் தமிழக டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:_

சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

வாகனங்களில் ஏறுவது கட் அவுட்டுகள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தான செயல்கள். இளைஞர்கள் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். டேங்கர் லாரி, கட் அவுட்களில் ஏறி உயிரிழக்கும் போது அந்த குடும்பமே சிரமப்படுகிறது. கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்றார்.


Next Story