இளைஞர்கள், தொழில் முனைவோர்கள்இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்


இளைஞர்கள், தொழில் முனைவோர்கள்இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:45 PM GMT)

தேனி மாவட்டத்தில் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி

இ-சேவை மையம்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம், படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைக்க உதவுகிறது.

இணைய வழியில் விண்ணப்பம்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, கணினி, அச்சுப்பொறி, வருடி சாதனம், கைரேகை அங்கீகார சாதனம், இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும். மேலும், குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மைய ஆபரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் திறக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 14-ந்தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பத்தை சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம்

கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6 ஆயிரம் விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனை ஒரு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொள்ள படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story